பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் மனிதனின் வாழ்வை இனிமையாக்குவது எது என்பது குறித்த ஆய்வில் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
பெல்ஜியம், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது எது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் பலரும் நண்பர்கள், குடும்பம், ஆரோக்கியம், கல்வி, பணம், பணி, பொழுதுபோக்கு, வளர்ப்பு பிராணிகள், மதம், ஓய்வு, நம்பிக்கை, ஆன்மீகம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறியுள்ளனர். அதிலும் தென்கொரியாவில் 6 சதவீதம் பேரும், இத்தாலியர்களில் 43 சதவீதம் பேரும் தங்களுடைய வாழ்வை இனிமையாக்கியது “பணி” தான் என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அமெரிக்காவில் 15 சதவீதம் பேர் தங்களது வாழ்வை இனிமையாக்கியது “மதம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் அமெரிக்கர்கள் பெரும்பாலானோர் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் மற்றும் ஆன்மீகத்தை கூறியுள்ளனர். ஆனால் சிலர் ஆரோக்கியம் தான் வாழ்வை இனிமையாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கிடையே இளைஞர்கள் கல்வி, நண்பர்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்டவை தான் தங்களது வாழ்வை இனிமையாக்கியது என்று கூறியுள்ளனர். அதேசமயம் வயதானவர்கள் ஆரோக்கியம் மற்றும் ஓய்வை குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் அமெரிக்காவில் “குடும்பம்” தான் தங்களது வாழ்வை இனிமையாக்கியது என்று மக்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சொத்து மற்றும் பணி உள்ளிட்டவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகின்றனர். மேலும் ஆய்வில் பங்கேற்ற 17 நாடுகளில் 14 நாடுகளைச் சேர்ந்தவர்கள் “குடும்பம்” தான் தங்களுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். அதனைப் போலவே அதிக அளவிலான வருவாய் கொண்டவர்களும், அதிக அளவில் கல்வி பயின்றவர்களும் “குடும்பம்” தான் தங்களது வாழ்வை இனிமையாக்கியுள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்து விளங்கும் நாடுகளில் கூட குடும்பம் தான் முக்கிய காரணியாக பார்க்கப்பட்டு வருகிறது.