ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வந்த சமயத்தில் அந்த குழுவில் இடம்பெற்றிருந்த மாணிக்கம் திடீரென பாஜகவில் இணைந்து இருக்கிறார். 2016 முதல் 2021- ஆம் ஆண்டு வரை சோழவந்தான் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது முதல் நபராக ஆதரவு அளித்தவர். ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்த பின் அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவிலும் இடம் பெற்ற மாணிக்கம், சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் திருப்பூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்திற்கு சென்ற மாணிக்கம் அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சட்டமன்ற தேர்தலின்போது பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய மாணிக்கம் தொடர்பான ஆடியோ ஒன்று வெளியானது. அதனை திட்டவட்டமாக அவர் மறுத்திருந்தார். அதிமுகவில் அதிகார மோதல் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அக்கட்சியின் கூட்டணியைச் சேர்ந்த பாஜகவில் மாணிக்கம் இணைந்திருக்கிறார். தீவிர ஆதரவாளர் கட்சி மாறியதால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.