நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி இலக்கை எட்டுவது கடினம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆக்சிஜன் ஜெனரேட்டர் திறப்பு விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு ஆக்சிஜன் ஜெனரேட்டரை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்குவினால் தமிழகத்தில் 6 நபர்கள் உயிரிழந்துருப்பதாகவும், 513 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறினார்.
வருகிற நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி இலக்கை எட்ட முடியும் என கூறிய அமைச்சர் தற்போது 100% இலக்கை எட்டுவது கடினம் என்று தெரிவித்தார். தடுப்பூசி காலாவதியாகும் நிலை தமிழகத்தில் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். முதல் தவணை தடுப்பூசி 77%பேரும் 2-வது தவணை தடுப்பூசியை 44% பேரும் செலுத்தி உள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு சான்றிதழ் வருவது குறித்து தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக கூறிய அமைச்சர், அது தொழில்நுட்பக்கோளாறு என்றும், அவ்வாறு மீண்டும் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.