தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த வாரம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. அதனால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் ஒரு சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக்கிய தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் சென்னையில் மீண்டும் பெரும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், தமிழ்நாடு, ஆந்திரா கடலோரங்களில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.