சபாநாயகர் அப்பாவுவின் கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். சட்ட சபைத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான தீர்வு காண வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மாநில சட்ட மன்றங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு இமாச்சல பிரதேசத்தில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது. நூற்றாண்டு காணும் பெருமைமிக்க தமிழ்நாடு சட்ட மன்றத்தின் தலைவராக அப்பாவு அவர்கள் அந்த மாநாட்டில் ஆற்றிய உரைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் தம் உரையில் மக்களாட்சியின் அடிப்படை கோட்பாடுகள், சட்டப்பேரவையின் அதிகாரங்கள், செயல்பாடுகளை எடுத்துக்கூறி இரண்டு சட்டமன்றங்கள் எதிர்கொண்டு இருக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். மேலும் மக்களாட்சியின் ஆணிவேராக திகழ்வது சட்டம் இயற்றும் மன்றங்களாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் கடமை சட்டங்களை இயற்றுவது மட்டுமல்ல. ஆட்சியாளர்களின் நிறை குறைகளை சுட்டிக் காட்டுவதும் ஆகும். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது அவையின் மாண்பையும் நிலைநிறுத்துவது, பேரவைத் தலைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அப்பாவு தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் மிகவும் கண்ணியமாக நடக்கின்றது என்பதை பதிவு செய்தார். குடியரசு ஒன்றியத்தின் நாடாளுமன்ற நடைமுறைகளை நாம் பின்பற்றுகிறோம். பேரவையின் நடவடிக்கைகள், பேரவைத் தலைவரின் அதிகாரங்களில், நீதிமன்றங்கள் குறுக்கிடுகின்ற வழக்கம் இல்லை. மக்கள் ஆட்சி என்ற அமைப்பில், நாடாளுமன்றம், சட்டமன்றங்களே அதிகாரம் பெற்ற அமைப்புகள் ஆகும். மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகின்ற அந்த அவைகளில் இயற்றப்படுகின்ற சட்டங்களுக்கு விளக்கம் அளிப்பது மட்டுமே நீதிமன்றங்களின் கடமை ஆகும்.
ஆனால், அண்மைக்காலமாக, நீதிமன்றங்கள், பேரவையின் அதிகாரங்களில் குறுக்கிடுகின்ற போக்கு ஏற்பட்டு இருக்கின்றது. பேரவையின் இறையாண்மையில் குறுக்கிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை. குடியரசுத் தலைவரும் ஆளுநரும் கூடியவிரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அரசு அமைப்பு சட்டம் கூறுகின்றது. அது எவ்வளவு காலம்? அதற்கான காலக்கெடு என்ன? அவர்கள் ஒப்புதல் அளிப்பதற்கும், திருப்பி அனுப்புவதற்கு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதற்கு காலவரையறை வகுக்க வேண்டியது கட்டாயம். அனைத்து இந்திய அளவில் கருத்து பரிமாற்றங்கள் நிகழவேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பாவுவின் கருத்துக்கள் வலியுறுத்துகின்றது” என்று தெரிவித்துள்ளார்.