கல்லூரியில் வைத்து 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் உணர்வுகள் அமைப்பின் சார்பாக சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இவ்வாறு உணர்வுகள் அமைப்பின் சார்பாக லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் சீர்வரிசைகளோடு நடைபெற்ற இந்த திருமணத்துக்கு எம்.சி.ஆர் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ரிக்சன் தலைமை தாங்கினார். இந்த திருமணத்தில் யூனிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவீன் குமார், ஸ்ரீபதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீநிவாச மூர்த்தி உட்பட பெரும்பாலானோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிலையில் உணர்வுகள் அமைப்பின் தலைவரும், ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவருமான மக்கள் ஜி.ராஜன் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அ.கணேசமூர்த்தி எம்.பி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் எம்.எஸ்.தங்கராஜ், அருள்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதற்கு முன்பாக மணமக்களான விஜயகுமார்-மகேஸ்வரி, சிவசண்முகம்-நித்யா, குமரேசன்-காளீஸ்வரி,பிரசாத்-சுபாஷினி, ஜனார்த்தனன்-விஜயகுமாரி, ருத்ர கோடி-வனிதா உள்ளிட்ட 6 ஜோடிகளுக்கும் வழிபாட்டு முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கு வீட்டு உபயோக பாத்திரங்கள், சமையல் பொருட்கள், தேவையான அத்தியாவசிய பொருட்கள், தங்கத்தாலி, பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டை, வெள்ளி மெட்டி உள்ளிட்ட சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டது. இதனிடையில் திருமணத்திற்கு வந்திருந்த சுமார் 1,300 நபர்களுக்கு விருந்து நடைபெற்றது. அதன்பின் இறுதியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவரான துரைராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.