அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அதிகாரிகள் ரிப்போர்ட் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து எந்த விமர்சனமும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின். இதனால் சமூக வலைத்தளங்களில் மூலமாக எந்த விமர்சனம் வந்தாலும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது எந்த பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்து அனைத்தையும் தெரிந்து அப்டேட் ஆக இருக்கிறார் முதல்வர். தன்னை சுற்றி திறமையான அதிகாரிகள் இருக்குமாறு பார்த்துக் கொண்ட ஸ்டாலின் தலைமைச் செயலாளராக இறையன்பு, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதய சந்திரனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் உரை, அறிக்கை முக்கிய நபர்களின் சந்திப்பு என அனைத்தும் மிக பொருத்தமாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் என்னென்ன கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வருகின்றது என்பது ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அப்படி அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் மூலம் ஸ்டாலின் தெரிந்து வருகிறார். துறை ரீதியாக அவர்களது செயல்பாடு எப்படி உள்ளது என்பதை கண்காணித்து அதிகாரிகள் சிலர் முதல்வருக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளார்கள். இதனால் பல அமைச்சர்கள் பீதியில் உள்ளனர்.
கட்சியில் செல்வாக்கு, சமூகம் என ஒவ்வொரு அமைச்சருக்கும் பல பதவிகள் கொடுக்கப்பட்டாலும், துறைரீதியாக அவர்களின் செயல்பாடு சரியில்லை என்றால் அவர்களை மாற்றி விடவேண்டும் என்று முடிவில் ஸ்டாலின் உள்ளார். அந்த வகையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது துறை குறித்து அறிந்து கொள்ள மிகவும் சிரமப்படுகிறார் எனவும். பதவியேற்ற 6 மாதங்களாகியும் இதுதான் அவரது நிலை என்பதால் அவரை மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.