பள்ளிக்கு செல்லும்படி பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள அசக்காட்டுப்பட்டி கிராமத்தில் உத்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும் துர்காதேவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் துர்க்காதேவி அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாடங்கள் மிகவும் கடினமாக உள்ளது, எனவே நான் பள்ளிக்கு செல்லவில்லை என மாணவி பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.
இதற்கிடையே பள்ளி ஆசிரியர்கள் துர்காதேவி சரிவர படிப்பதில்லை என பெற்றோரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து மகளின் படிப்பு வீணாகிவிடகூடாது என பெற்றோர் மாணவியை கண்டித்து பள்ளிக்கு செல்லும்படி வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் அறையில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து துர்கா தேவியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கொல்லிமலை வாழவந்தி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.