கணவன் தகராறில் மனைவியை கடப்பாறையால் தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நடுபாளையம் பகுதியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தற்போது பூங்கொடி அருகில் உள்ள நூல் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பூங்கொடி வழக்கம்போல் மில்லுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலை முடிந்ததும் பூங்கொடி மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த குருநாதன் மனைவியிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் சிறிது நேரம் கழித்து அவர்களது வீட்டிலிருந்து ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்கு ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது வீட்டிலிருந்து குருநாதன் பதற்றத்துடன் வெளியே ஓடினார். இதனையடுத்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் பூங்கொடி பரிதாபமாக இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. மேலும் அங்கு ஒரு கடப்பாறையும் கிடந்துள்ளது. இந்நிலையில் குருநாதன் தனது மனைவியை கடப்பாறையால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த வெள்ளகோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூங்கொடியின் உடலை கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய குருநாதனை வலைவீசி தேடி வருகின்றனர்.