திரிபுரா வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் இடதுசாரி சிந்தனையாளர், அம்பேத்கரின் சிந்தனையாளர்கள், எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் இல்லை. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்தவர்கள் இல்லை என்றாலும் அவர்கள் குறி வைக்கப்பட்டார்கள், கைது செய்யப்பட்டார்கள் இன்று சிறை படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய கருத்துக்களைப் பரப்பக்கூடாது அந்தக் கருத்துக்களை பேசக்கூடியவர்கள் செயல்படக் கூடாது என்பதில் தீவிரமாக செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு இயங்குகிறது இயக்கமாகத் தான் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளும், பாரதிய ஜனதா கட்சியும் விளங்குகின்றன. இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்டால்தான் திரிபுராவில் நடக்கிற, திரிபுராவில் நடந்து கொண்டிருக்கிற வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து நாம் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய தேவையை உணர்ந்து கொள்ள முடியும்.
சங்பரிவார் கும்பல் என்ன விதண்டாவாதம், குதர்க்கவாதம் செய்வார்கள் என்றால், வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டார்களே என்று கேள்வி எழுப்புவார்கள். எந்த நாட்டிலும் சிறுபான்மையினரை தாக்கக்கூடாது. சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.
இஸ்லாமியர்களின் உணர்வுகளை காயப்படுத்தக்கூடிய வகையில், அவர்கள் பெரிதும் போற்றுகிற குர்ஆனை இழிவு படுத்தியதை தொடர்ந்து, அங்கு வன்முறை வெடித்திருக்கிறது என்று நாம் ஊடகங்களில் பார்க்கிறோம். உடனடியாக அங்குள்ள அரசு, இஸ்லாமிய அரசு மிக வேகமாக களமிறங்கி வன்முறையாளர்களை கைது செய்தது, வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தது. அங்குள்ள சிறுபான்மை சமூகமாக இருக்கின்ற இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்தது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. மறக்கவும் முடியாது என தெரிவித்தார்.