சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சந்நதியில் அர்ச்சனை செய்யக் கோரிய, பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணைய தளங்களில் வைரலாகப் பரவியது.இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமின் கோரி தீட்சிதர் தர்ஷன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கோயில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டும் என அந்தப் பெண் தகராறு செய்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னை நோக்கி கையை தூக்கியதால், தான் தற்காப்புக்காக கீழே தள்ளி விட்டதாகவும், தனக்கெதிராக காவல் துறையினர் பொய் வழக்கு போட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், இதுகுறித்து காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் மூன்றாம் தேதிக்கு தள்ளி வைத்தார்.