அரசியல் சாசனத்தை நாம் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட்டம் இன்று தொடங்கியது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அனைவரையும் இந்த நாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களுக்கு இந்த நேரத்தில் அஞ்சலி செலுத்துகிறோம். அரசியல் சாசனத்தை நாம் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும். அரசியலமைப்பு தினம் என்பது நாடாளுமன்றத்தை வணங்கும் தினம்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்துத் துறைகளிலும் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய அரசியல் அமைப்பு மீதான தாக்குதலை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பே ஒன்றுபடுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு தான் நமது மாநிலங்களை இணைக்கிறது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது.
அம்பேத்கர் நாட்டிற்கு ஆற்றிய சேவை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை அரசியல் சாசனம் நிரூபிக்கிறது. அம்பேத்கரின் மகத்தான சேவையை வெளிப்படையாக பாராட்ட சிலர் தயங்குவது வேதனை அளிக்கிறது என்று பேசினார்..
அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தை திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி ஐயூஎம்எல் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.