கழிவுகளை கொட்டி தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்தூரில் இருந்து திருமலாபுரம் வழியாக சிவநாடானூர் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை ஓரங்களில் கேரளாவிலிருந்து வரும் எலெக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் கழிவுகள் பல நாட்களாக கொட்டப்படுகிறது. இந்த கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிட்டது.
இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மர்மநபர்கள் இரவு நேரத்தில் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். எனவே கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை காவல்துறையினர் தீவிரமாக சோதனை செய்ய வேண்டும். இதுபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.