சாமி சிலைகளை டீக்கடையில் வைத்து சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் தண்டலை பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் வேல்முருகன் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை அடைக்கும் போது அங்குள்ள பெஞ்சில் பை ஒன்று இருந்ததை பார்த்துள்ளார். அந்த பையை திறந்து பார்த்த போது அதில் செம்பாலான ஒரு தூபக்கால் மற்றும் 5 சாமி சிலைகள் இருந்ததை பார்த்து வேல்முருகன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வேல்முருகன் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 12 செ.மீ உயரமுள்ள அம்மன் மற்றும் கருடபகவான் சிலை, 6 செ.மீ உயரமுள்ள நடராஜர் சிலை, 8 செ.மீ உயரமுள்ள பெருமாள் சிலை மற்றும் 5 செ.மீ உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை, தூபக்கால் ஆகியவற்றை கைப்பற்றினர்.
அதன்பிறகு சாமி சிலைகள் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் இருக்கும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாமி சிலைகளை யாரேனும் கடத்தி வந்து டீ கடையில் வைத்து சென்றனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.