ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி மீட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு அருகிலுள்ள வண்டிக்காரத் தெருவில் ஆனைகட்டி குளம் உள்ளது. இந்த குளம் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாததால் சிலர் அதனை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சீர்காழி தாசில்தார் தலைமையில், காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆனைகட்டி குளத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் ஜே.சி.பி. மூலம் அகற்றப்பட்டது.
இதனால் வண்டிக்காரத் தெருவில் பரபரப்பு ஏற்பட்டதால், அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் சில தினங்களுக்குப் பிறகு அப்புறப்படுத்தப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.