மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 5 ஆண்டு காலமாக அருள்செல்வன் என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அருள்செல்வன் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரான ராஜேஸ்வரியிடம் மாணவி புகார் அளித்தும் அருள்செல்வன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அருள் செல்வன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பொறுப்பு தலைமை ஆசிரியரான லதா என்பவரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பின் லதா ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். இந்நிலையில் கிராம மக்கள் அருள்செல்வன் மற்றும் தலைமையாசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அரியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருள் செல்வன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.