மக்களவையில் சிறப்பு பாதுகாப்பு குழு மசோதா 2019 தாக்கல் செய்யப்பட்டபோது, கோட்சே கூறிய கருத்துகளை திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசா எடுத்துரைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங், கோட்சே ஒரு தேச பக்தன் என முழங்கினார். இது மக்களவையில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்புத் துறை நிலைக்குழு உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், நடப்பு கூட்டத்தொடரின் பாஜக நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவும் அக்கட்சி தடைவிதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள பிரக்யா சிங், “சுதந்திர போராட்ட வீரர் உத்தம் சிங் அவமானப்படுத்தப்பட்டதை என்னால் பொருத்துக்கொள்ள முடியாது” என்றார். இதன்மூலம், தான் உத்தம் சிங்கை தான் குறிப்பிட்டேன் என விளக்கமளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்த மாலேகன் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா சிங்குக்கு தொடர்பிருப்பதாகக் கூறி, அவர் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை, போதிய ஆதாரங்கள் பிரக்யா மீது இல்லாததால், வழக்கை கைவிடுவதாக தெரிவித்தது. முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், 2017ஆம் ஆண்டு இவருக்கு ஜாமின் வழங்கியது.
ஜாமினில் வெளிவந்த பின் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர், பலம் வாய்ந்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கை வீழ்த்தி மக்களவை உறுப்பினரானார். அவ்வப்போது எதையாவது சர்ச்சையாகப் பேசும் இவர், காந்தியை கொன்ற கோட்சே தேசபக்தியாளர் என்று கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.