பஞ்சராகி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்திருக்கும் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்தாஜ் அகமத். இவருடைய தந்தை ரஷீத் அஹ்மத் மற்றும் தாயார் துரையா, மனைவி சப்பனா மற்றும் 2 வயது குழந்தை இணையா ஆகியோருடன் பெங்களூருவில் இருக்கும் தங்களது உறவினர்களை பார்ப்பதற்காக வேலூரில் இருந்து காரில் புறப்பட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கல்குட்டை பெருமாள் கோவில் எதிரில் சென்ற நிலையில் காரின் முன்பக்க டயர் பஞ்சராகி உள்ளது. இதன் காரணத்தினால் அஸ்தாஜ் அகமத் காரை நிறுத்தியுள்ளார்.
அப்போது காரின் முன்புறத்தில் இருந்து திடீரென நெருப்பு வந்ததால் இதை அறிந்த காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதினால் எல்லாரும் உயிர் தப்பி உள்ளனர். பின்னர் காரானது மளமளவென தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்துள்ளனர். பின்னர் நாற்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.