தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பள்ளி அளவில் மாணவர்கள் பாட சுமையை குறைத்து அவர்களை உடல் தகுதியுடனும், ஆரோக்கியத்துடனும், மன அளவில் தனித்திறமையுடனும், ஆளுமை திறமையுடனும் தயார் படுத்துவதற்கு பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
உடல்சார்ந்த பயிற்சிகளின் மூலம் உடல் தகுதி பயன்படுவதால் கற்றலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த இயலும். எனவே பள்ளிகள் அளவில் முதலில் இதனை செயல்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. அரசு, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத்திற்கு இரு பாடவேளைகள் மட்டுமே உடற்கல்விகாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் படிப்பில் ஒரு பகுதியாக அன்றாடம் உடல் சார்ந்த பயிற்சிகள் கொண்டுவரப்பட்டால் பாட சுமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் குறைந்து கற்றல் திறன் மேம்படும் நிலை ஏற்படும்.
மேலும் பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டி, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க கூடிய உடற்தகுதி மற்றும் ஆர்வம் மாணவர்களுக்கு உருவாகும்.
எனவே ஒவ்வொரு பள்ளியிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கு முன்னர் 15 நிமிடங்களும், மாலை 45 நிமிடங்களும் உடல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். உடல் சார்ந்த பயிற்சிகளில் விளையாட்டு, நடனம், யோகா, உடற்பயிற்சி ஆகிய அனைத்து அம்சங்களும் இடம் பெறவேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் மற்றும் இதர உடற்கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை பயன்படுத்தி இதனை செயல்படுத்தலாம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.