அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் இருந்து அரசு பேருந்து தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் கருணாகரன், நடத்துனர் ஆறுமுகம், ரேவதி, சுஜாதா ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த குன்னம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.