தமிழகத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்ற, கைவிடப்பட்ட விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பென்ஷன் திட்டங்களை அரசு வழங்கி வருகின்றது. அந்தத் திட்டத்தில் முதியோர் மற்றும் விதவைகள் மிகுந்த அளவு பயன்பெறுகின்றனர். தற்போது இந்த திட்டங்களை பெறுபவர்கள் அனைவரும் கட்டாயமான முறையில் ஆதார் கார்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பென்ஷன் திட்டங்களில் 8 வகையான திட்டங்கள் உள்ளது.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் , இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவை பென்சன் திட்டம் , மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் , ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற/கைவிடப்பட்ட மனைவிகள் ஓய்வூதியத் திட்டம் , முதல்வர் உழவுப் பாதுகாப்புத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம் போன்ற திட்டங்கள் ஆகும்.
இந்தத் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தில் பயன் பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆதார் கார்டு பெறும்வரை பென்ஷன் தொகை பெறுவதற்கு ஆதார் கார்டு விண்ணப்பிப்பதற்கான கோரிக்கை ஆவணம் காட்ட வேண்டும். அதனுடன் வங்கி பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காட்ட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.