தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான சந்திரன் நகர் மற்றும் அவ்வை நகர் பகுதிகளில் 1500-க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளில் எப்பொழுது மழை பெய்தாலும் மழைநீர் வெளியேறுவதற்கு வடிகால் இல்லாத காரணத்தினால் குளம் போல் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி விடுகின்றது. இதனால் பொதுமக்கள் கொசுத்தொல்லை, துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இது பற்றி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காத காரணத்தினால் புதுப்பேட்டை ரோட்டில் திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.