1 1\2 வயது குழந்தையுடன் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திலக சவுமியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு முகுந்தராஜ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கடன் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த திலக சவுமியா குழந்தையுடன் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகுமார் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
அந்த சமயம் வீட்டிலிருந்த திலக சவுமியா ஒரே கயிற்றில் ஒரு முனையில் தனது கழுத்தையும் மற்றொரு முனையில் குழந்தையின் கழுத்தையும் கட்டி விட்டு தூக்கில் தொங்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தை முகுந்தராஜின் கயிற்றின் முடிச்சு அவிழ்ந்தது. இதனால் குழந்தை தரையில் கீழே விழுந்து காயமடைந்து அலறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் நீண்ட நேரமாக குழந்தை அலறி கொண்டிருந்ததால் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது திலக சவுமியா தூக்கில் பிணமாக தொங்கியதையும், குழந்தை அழுது கொண்டிருந்ததையும் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூடங்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்த குழந்தையை உடனடியாக மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து காவல்துறையினர் திலக சவுமியாவின் உடலை உடனடியாக கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.