திரிபுராவில் நடந்த வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், நம்மையெல்லாம் மனிதர்களாய் கருதிய மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை எழுதுகிறபோது… இந்த புதிய இந்திய தேசத்திற்கான ஒரு கொள்கை அறிக்கையாக அதை எழுதுகிறார். இதுதான் அந்த முகவுரையின் அடிப்படை நோக்கம். ஏனென்றால் பழைய இந்தியாவை தகர்க்க போகிறோம் என்று பொருள். சனாதன இந்தியாவை தகர்க்க போகிறோம் என்று பொருள்.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை இங்கே நிலைநிறுத்தியிருக்கிற வர்ணாசிரம கோட்பாடுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிற ஆணுக்குப் பெண் அடிமை தான் என்று இங்கு நிறுவி இருக்கிற இந்த சமூக கட்டமைப்பை தகர்த்து எறிய போகிறோம். சிதைக்க போகிறோம், என்பதைத்தான் அந்த முகவுரையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பிரகடனம் செய்கிறார், அறிவிப்பு செய்கிறார்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களின் தலைமையில் அன்றைக்கு ஆட்சி நிர்வாகம் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் இவையெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டன. அப்படி விவாதிக்கப்பட்ட நிலையில்தான் இந்த தேசத்தை… இந்த நாட்டை… மதம் சார்ந்த நாடு என்று அறிவிக்க அவர்கள் முன்வரவில்லை. அதில் இன்னும் ஒருபடி மேலே போய் மிசா காலத்தில் அதுலேயும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து மறைந்த இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் அதல் செக்யூலர் என்ற வார்த்தையையும் இணைத்தார்.
இந்த நாடு மதம் சார்ந்து பிளவுபட்டு விடக்கூடாது என்று தடுப்பதற்காக முயற்சித்த தலைவர்களுள் என்ன கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் காந்தியடிகள் முதன்மையானவர், என்பதை மறந்து விடக்கூடாது. இந்துக்களும், இஸ்லாமியர்களும் மோதிக் கொண்டு ஒருவருக்கொருவர் பலியாகிக் கொண்டிருந்த நேரத்தில், இஸ்லாமியர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்றும் குரல் கொடுத்ததற்காகவே காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை மறந்து விடக்கூடாது.
இஸ்லாமிய சமூகம் என்றென்றைக்கும் காந்தியடிகளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். காந்தியடிகளின் உயிரைப் பறிப்பதற்கு அதுதான் காரணம். அவர் அதி தீவிரமான இந்துத்துவ சிந்தனையாளர், சனாதன கருத்தியலாளர். புரட்சியாளர் அம்பேத்கருக்கும் – காந்தியடிகளுக்கும் அதில் கடுமையான முரண்பாடு உண்டு, மோதல் உண்டு. ஹரே ராம் ஹரே ராம் என்று மூச்சுக்கு 300 முறை ராமன் பெயரை உச்சரிக்கக் கூடிய ராம பக்தர்.
ராமராஜ்யம் என்கிற பெயரில் ஒரு ராம ராஜ்ஜியத்தை நிறுவ வேண்டுமென்று விரும்பியவர். இத்தகைய கருத்து மாறுபாடுகள் நமக்குள் இருந்தாலும்கூட இந்த மண்ணை மத அடிப்படையில் பிரிப்பதற்கு, இதையும் ஒரு மதம் சார்ந்த நாடாக அறிவிப்பதற்கு உடன்படாமல் இருந்தவர் காந்தியடிகள். இது வரலாறு. அதை யாரும் மாற்ற முடியாது. இதை யாரும் மறுத்துவிட முடியாது. இது வரலாற்று உண்மை. ஆகவே இவர்களின் போராட்டம் என்பது ஆதிகாலத்திலிருந்தே இந்த நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு இருந்தே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.