கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் பகுதியில் உள்ள நெய்வேலி கிராமத்தில் கலைமணி என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி பானுமதி மற்றும் மகன் கர்ணன். அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகள் கௌசிகாவும் கர்ணனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் இருவரும் 10 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்தனர்.
இந்நிலையில் கௌசிகா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். அதனால் அவரின் வளைகாப்பிற்காக அவரது கணவர் அழைப்பிதழ் அச்சிட்டுள்ளார். அதில் கெளசிகா தனது தாய்,தந்தை, அண்ணன் மற்றும் அண்ணி ஆகியோரின் பெயரை பத்திரிகையில் அச்சடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று விருதாச்சலத்தில் உள்ள மேத்தா திருமண மண்டபத்தில் வளைக்காப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பெண்ணின் அண்ணன் வினோத் கையில் கத்தியுடன் திருமண மண்டபத்தில் நுழைந்து கர்ணன் மற்றும் கௌசிகா ஆகிய இருவரையும் கொலை செய்ய முயற்சி செய்தார்.
மண்டபத்தில் இருந்த அவரது உறவினர்கள் அவரை பிடித்து கத்தியை வாங்க முயற்சி செய்தனர். அப்போது அவர்களிடையே ஏற்பட்ட தள்ளும் முள்ளின் காரணமாக கர்ணனின் மாமா சிலம்பரசன் என்பவர் வயிற்றில் கத்தி பாய்ந்தது. மேலும் கர்ணன் மற்றும் கெளசிகா ஆகிய இருவருக்கும் பலத்த அடிபட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த விருதாச்சலம் காவல்துறையினர் வினோத் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.