தற்போதைய நவீன கிரிக்கெட்டில், ”catches win matches” என்று கமெண்டெட்டர்கள் ஃபீல்டர்கள் குறித்து அதிகம் பேசிவருவதை ஒவ்வொரு போட்டியிலும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். பேட்டிங், பவுலிங்கைவிட ஃபீல்டிங்கில் ஒரு கேட்ச், ஒரு ரன் அவுட்தான் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றி அமைக்கிறது. இருப்பினும், போட்டியில் ஃபீல்டர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், ஆட்டநாயகன் விருது என்பது பேட்ஸ்மேன் அல்லது ஃபீல்டர்களுக்குத்தான் கிடைக்கிறது.
ஃபீல்டர்களுக்கான அங்கீகாரமும், கவனமும் தென் ஆப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸின் வருகைக்குப் பிறகுதான் அதிகம் கிடைத்தது. ஆனால், ஜான்டி ரோட்ஸ் வருகைக்கு முன்னதாகவே ஃபீல்டர்களுக்கான கவனத்தை ஈர்த்தவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் குஸ் லோகி. அதுவும் ஃபீல்டர்களால் ஆட்டநாயகன் விருதை பெறமுடியும் என்பதை முதலில் நிரூபித்துக் காட்டியவரும் இவரே.
1986இல் ஷார்ஜாவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பந்தை எங்கு அடித்தாலும், அது அவர்களது துரதர்ஷடம் அது நேராக குஸ் லோகியிடம்தான் சென்றது.
ஃபீல்டிங்கில் அசத்திய குஸ் லோகி மூன்று கேட்ச், இரண்டு ரன் அவுட் செய்தார். பாகிஸ்தான் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களான முடசார் நாசர், சலீம் யூசஃப், இஜாஸ் அகமது ஆகியோரை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். அதுமட்டுமின்றி, ஜாவித் மியான்டட், அசிஃப் முஷ்டபா ஆகியோரையும் தனது மிரட்டலான ஃபீல்டிங்கால் ரன் அவுட்டாக்கினார். மாற்று வீரராக உள்ளே நுழைந்த இவர், தனது ஃபீல்டிங்கால் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், ஃபீல்டிங்கில் அனைவரது கவனத்தை ஈர்த்த குஸ் லோகி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலம், ஃபீல்டர்களும் ஆட்டநாயகன் விருதை பெறலாம் என்பதை அவர் உணர்த்தி நேற்றோடு 33 ஆண்டுகள் நிறைவடைகின்றன.