கோவையில் இருந்து கேரளா மாநிலத்துக்குச் செல்வதற்கு, பாலக்காடு மாவட்டம் வழியாக ரயில் தண்டவாள வழித்தடம் செல்கிறது. இதன் வழியாக தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில்கள் கேரள மாநிலத்துக்குச் சென்று வருகின்றன. இந்நிலையில், நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று இரண்டு குட்டிகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக வந்த மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது மோதியது. இதில் மூன்று காட்டு யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை மருத்துவ குழுவினர் தண்டவாளத்தில் இருந்து யானைகளை அப்புறப்படுத்தினர். குட்டிகளோடு தாய் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.