தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்தமான் அருகே நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் அதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
வங்ககடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நவம்பர் 30ஆம் தேதிவரை நீடிக்கும் என்பதால் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதை ஒட்டிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.