தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கனமழை காரணமாக சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இருந்தாலும் பல சாலைகளில் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து கொண்டு செல்கின்றன. இதனிடையே 8 முக்கிய சாலைகள் மழை வெள்ளத்தால் முடங்கியுள்ளன. அந்த சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, வளசரவாக்கம் மெகா மார்ட் சாலை,தி.நகர் வாணி மகால் முதல் பென்ஸ்பார்க் வரை, கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள அண்ணா பிரதான சாலை, உதயம் தியேட்டர் சந்திப்பில் காசி தியேட்டர் முனையில் இருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் சாலை, மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை, ராம்நகர் மெயின் ரோட்டில் சூழ்ந்துள்ள வெள்ளம் காரணமாக மடிப்பாக்கத்தில் இருந்து ராம்நகர் வழியாக வேளச்சேரி செல்லும் பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கீழ்க்கட்டளையில் இருந்து திருவான்மியூர் செல்லும் பஸ்கள் மேடவாக்கம் கூட்டு ரோடு, பள்ளிக்கரணை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் இருசக்கர வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மழை நீர் அதிகம் தேங்கி உள்ளதால் போக்குவரத்து முழுமையாக முடங்கி உள்ளது. அந்த சுரங்கப்பாதையும் மூடப்பட்டுள்ளது.