நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர் என் ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசி வருகிறார். இதில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நேற்று விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்நாட்டின் தனித் தன்மையை கருத்தில் கொண்டு மசோதாவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும், நீட் விலக்கு மசோதா செப்டம்பரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது எனவும் ஆளுநரிடம் முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.