Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா கொலை வழக்கு… காட்டிக்கொடுத்த டோல்கேட் சிசிடிவி காட்சிகள்…!!

பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து பின் கொலை செய்த 4 குற்றவாளிகளை தெலங்கானா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

பின்னர், இருவரையும் பார்த்து சந்தேகித்த பிரியங்கா தன் தங்கை பவ்யாவிடம் ஃபோனில் பேசியுள்ளார். அதற்கு பவ்யா அருகிலுள்ள டோல்கேட்டுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி அழைப்பைத் துண்டித்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பவ்யா, பிரியங்காவை தொடர்பு கொள்ள அழைத்துள்ளார். ஆனால், பிரியங்காவில் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. இதையடுத்து அச்சமடைந்த பவ்யா, பெற்றோரிடம் கூறி காவல் நிலையத்தில் பிரியங்காவை காணவில்லை என்று புகாரளித்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்து பிரியங்காவை தேடி வந்த காவல் துறையினருக்கு, நேற்று காலை ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியிலுள்ள ஷாத்நகர் மேம்பாலத்திற்குக் கீழே எரிந்த நிலையில் பெண் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஒருவேளை அது பிரியங்காவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், காவல் துறையினர் அவரது தங்கை பவ்யாவையும் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்த பவ்யா, சில அடையாளங்களைப் பார்த்து அது தன் அக்காவின் உடலென்று உறுதி செய்தார். பின்னர், பிரியங்காவின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

உடற்கூறாய்வு செய்து முடித்ததற்குப் பின், பிரியங்கா அதிகாலை 3 மணியளவில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, துப்பட்டாவால் அவர் கழுத்தை நெறித்துக் கொன்று பின் எரித்துள்ளனர் என்று கூறிய மருத்துவர்கள், சுமார் ஒரு மணி நேரம் அவர் உடல் எரிந்திருக்கிறது எனவும் அவரது உடலை உடற்கூறாய்வு செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவலை தெரிவித்தனர்.

கொலைக் குற்றவாளி
இதன் பின்னர் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை அவர்கள் தேடி வந்தனர். பவ்யா கூறிய தகவலின்படி, ஷாத்நகர் அருகே உள்ள டோல்கேட்டிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல் துறையினர் ஆராய்ந்து பார்த்தனர். அதன்மூலம், பிரியங்காவுக்கு உதவி செய்ய வந்த லாரி ஓட்டுநர், கிளினர் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் இரண்டு பேரையும் காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் காவல் துறையினர் விசாரித்ததில், பிரியங்காவிற்கு உதவி செய்வது போல் நாடகமாடி, பின்னர் கடத்திச் சென்று டோல்கேட்டுக்குப் பின்னால் உள்ள காலி இடத்தில் வைத்து வன்புணர்வு செய்ததாக கூறியுள்ளார்கள். மேலும் டோல்கேட்டில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |