சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில், நான்கு பேர் கடந்த 10 நாட்களில், பல்வேறு காரணங்களால் மரணமடைந்துள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயாளிகளை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் முழுநேர மருத்துவருடன் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுசம்பந்தமாக பத்திரிகையில் வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், கடந்த மூன்று ஆண்டுகளில் மனநல காப்பகத்தில் எத்தனை மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்ற விவரங்களை நான்கு வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனருக்கும், மனநல காப்பக இயக்குனருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நோய் தாக்காமல் தடுக்க எடுக்கும் நடவடிக்கை பற்றியும் மருத்துவ சிகிச்சை வழங்க அடிப்படை மருத்துவ வசதிகள் ஏற்படுத்த அலுவலர்கள் எடுத்த நடவடிக்கை பற்றியும் அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.