நாடாளுமன்றம் துவங்கும் முதல் நாளான நவம்பர் 29-ஆம் தேதி வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் விவசாயி சங்கத்தினர் டிராக்டர் பேரணியை நடத்துவதாக இருந்தனர். இதனால் தற்போது அதனை ஒத்திவைப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்தது. தற்போதுதான் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும் இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வதற்கான மசோதா ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் தொடரும். போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். மேலும் போராட்டம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 4ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.