ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்சாக்னே மற்றொரு தொடக்க வீரர் வார்னருடன் கைகோர்த்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தினார். நேற்றைய ஆட்டநேர முடிவு வரை இருவரது விக்கெட்டுகளையும் அவர்களால் வீழ்த்த முடியவில்லை.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. லபுஸ்சாக்னே 162 ரன்களில் ஆட்டமிழக்க, வார்னர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி முச்சதம் அடித்து அசத்தினார். இதற்கிடையே களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 127 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 589 ரன்கள் எடுத்திருந்தபோது, அந்த அணி டிக்ளேர் செய்தது. முச்சதம் அடித்த வார்னர் 335 ரன்களும், மேத்யூ வேட் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். இதையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 3 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.