கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள துக்கியாம்பாளையம் மேலூர் கிராமத்தில் விவசாயி பழனி வசித்து வந்தார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு அருள்மணி என்ற மகனும், அகிலா ஆர்த்தி என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பழனியின் கிணற்றில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. மேலும் கிணற்றை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது. இந்நிலையில் பழனி கிணற்றை சுற்றியுள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மணல் திட்டு சரிந்ததால் மேட்டில் நின்ற பழனி கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார்.
இதனை பார்த்த பழனியின் உறவினர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா சங்கர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் வையாபுரி தலைமையில் காவல்துறையினர், வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் பழனியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சுமார் 70 அடி வரை தண்ணீரை கிணற்றில் இருந்து வெளியேற்றினால் தான் பழனியை மீட்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
மேலும் மணல் திட்டு சரிந்து விழுந்து தண்ணீர் கலங்கியதால் நவீன கேமராவை பயன்படுத்தியும் பழனியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் 5 மின் மோட்டார்களின் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றினர். அதன்பின் சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பழனியின் உடல் மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் பழனியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.