இரண்டு குழந்தைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் என்பவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், நிஷாந்த் என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தற்போது தனது மனைவி சத்யாவின் தாய் ஊரான ஏ.கே. மேட்டூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். அதன்பின் அதே பகுதியில் சத்யாவின் தங்கை கண்மணி, அவரது கணவர் முத்தும் வசித்து வந்திருக்கின்றனர். அப்போது முத்துவின் மகள் சஞ்சனா மற்றும் சுரேஷின் மகன் நிஷாந்த் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள பாம்பாற்றில் கலக்கும் நீரோடையில் விளையாட சென்றிருக்கின்றனர்.
அந்நேரம் எதிர்பாராதவிதமாக புதிதாக வந்த மழை வெள்ளத்தில் இரண்டு பேரும் பாம்பாற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சிறுவர்களைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் இரண்டு பேரும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது பற்றி பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தைகள் இரண்டு பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.