திரிபுரா வன்முறை சம்பவத்தை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைக் கோட்பாடுகள் அல்லது செயல் திட்டங்கள் யாவும் பாரதிய ஜனதா கட்சியில் தலைவர்களால் முடிவு செய்யப்படுவதில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர்களால் முடிவு செய்யப்படுகிறது. இந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் நடவடிக்கைகளை கூட, மோடியே தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்திருப்பார் அல்லது பிஜேபி தலைவர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. பின்னணியில் சங்பரிவாரின் திட்டம் இருக்கும். சங்பரிவாரின் திட்டமிருக்கும், வழிகாட்டுதல்கள் இருக்கும்.
ஒரு 100 ஆண்டு கால செயல் திட்டத்தை கையில் வைத்துக் கொண்டு இயங்குகின்ற இயக்கம்தான் சங்பரிவாரின் இயக்கம், ஆர்எஸ்எஸ் இயக்கம், அதன் துணை அமைப்புகள். அவர்களுக்கு பிராந்தியவாதம் கூடாது. அவர்களுக்கு மாநிலக் கட்சிகள் கூடாது. மொழி இன உரிமைகள் பேசக்கூடாது. மொழிவழி தேசிய அரசியல் கூடாது. இந்த அரசியல் எல்லாம் மத வழியில் மக்களை ஒருங்கிணைப்பதற்கு தடைகளாக இருக்கிறது. ஒருவன் தன்னை தமிழனாக உணர்ந்தாள் அவன் இந்துவாக உணர்வதில் சிக்கல் ஏற்படும்.
ஒருவன் தன்னை தென்னிந்திய மாநிலத்தை சார்ந்தவன் என்று உணர்ந்தால், அவனுக்கு இந்துவாக எண்ணுவதிலே முனைப்பு ஏற்படாது. ஒருவன் தன்னை பெரியாரிய வாதியாகவோ, அம்பேத்கரிய வாதியாகவோ, உணர்ந்தால் அவன் எந்த காலத்திலும் மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும், அடையாளத்தை தேட மாட்டான். அந்த அடையாளங்களை பிடித்து தொங்க மாட்டான். அதனால் அவன் இந்து என்கின்ற உணர்வை பெற மாட்டான். ஆகவே இந்து என்கின்ற உணர்வை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துவதன் மூலம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என தெரிவித்தார்.