தமிழக, கேரள முதலமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் இருக்கும் சாட்டை துரைமுருகனுக்கு, பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியை உடைத்து கற்கள், ஜல்லி உள்ளிட்டவற்றைச் சட்டவிரோதமாகக் கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய சாட்டை துரைமுருகன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசியதோடு, திருப்பெரும்புதூர் குண்டுவெடிப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகுறித்து திமுக அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் துரைமுருகன் பிணை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு வழக்குகளில் துரைமுருகனுக்கு பிணை வழங்கி, ஒவ்வொரு வழக்குகளுக்கும் 25,000 ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டுமெனவும், வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் நிலையத்தில், நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இது போன்ற நிகழ்வுகளில் மனுதாரர் ஈடுபட்டால் உடனடியாக பிணையை ரத்து செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டு நிபந்தனை பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.