இடியுடன் கூடிய பலத்தமழை பெய்த காரணமாக சுமார் 12 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டை உள்வட்டம், ஆ.காளாப்பூர், மூவன்பட்டி, எஸ்.வி. மங்கலம், மேலப்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.
இதனையடுத்து பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள சுமார் 12 வீடுகளின் வீட்டுக்கூரைகள் மற்றும் சுவர்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சிங்கம்புணரி வருவாய் அலுவலர் முகமது தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடுகளை ஆய்வு செய்து செய்துள்ளார். மேலும் வீடுகள் சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.