தமிழகத்தில் 2013-2014ஆம் கல்வியாண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதை ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயாக இருந்த 2 லட்சமாக உயர்த்தியும், மாணவர்களின் எண்ணிக்கை 1200 லிருந்து 1600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத் தொகையினை 50 ஆயிரம் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தியும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முழுநேர முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத்தொகை மற்றும் ஊக்கத் தொகை பெறும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பில் மாற்றம் என்ற அறிவிப்புக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான 2021-2022 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.