தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை மீண்டும் ஒரு புயல் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது என்றும், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு தொடர்ந்து மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.