தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் பிறகு கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. வழிபாட்டு தலங்களில் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாத திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இருந்தாலும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில முக்கிய விழாக்களுக்கு மாவட்ட வாரியாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
தற்போது அவ்வகையில் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. எனவே வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக டிசம்பர் 11ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.