தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நவம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற நவம்பர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வாக்காளரின் வசதிக்காக 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாம்களில் மொத்தம் 8.59 லட்சம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பெயர் சேர்ப்பதற்கு மட்டும் 61.41 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் கடைசியாக இன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, www.nvsp.in என்ற இணையதளத்திலும், VOTER HELPLINE என்ற மொபைல் ஆப் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.