சரக்கு வேனை திருடி பதுக்கி வைத்தவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் பச்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக சரக்கு வேன் ஒன்று வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். கடந்த 8-ஆம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பச்சியப்பன் வேன் திடீரென திருட்டு போனது. இதுகுறித்து பச்சியப்பன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் சரக்கு வேன் பதுக்கி வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கோலார் அருகிலுள்ள முத்தனூர் கிராமத்திற்கு சென்று அந்த வேனை மீட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள், அருள் ஆகிய 2 பேரும் சரக்கு வேனை திருடியது தெரியவந்தது. அதன்பின் பெருமாளை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.