ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா 8 நாள் சுற்று பயணமாக செனாப் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றுள்ளார். இரண்டாவது நாளான நேற்று ராம்பன் மாவட்டத்தில் உள்ள என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளைஞன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு கூல் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது “ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக எனது கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவேன் என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து நாங்கள் எங்களுக்காகவோ அல்லது எங்கள் வீட்டிற்காகவோ போராடவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்களாகிய உங்கள் நலன்களை பாதுகாப்பதற்காக போராடி வருகிறோம். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட நமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக இறுதி மூச்சு வரை போராடுவோம்” என்று அவர் கூறினார். மேலும் என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை அவரது குடும்பத்தினர் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.