தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது நாளை உருவாகும் என்று கணிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று தாமதமாக நவம்பர் 30-ஆம் தேதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.