தொடர்ந்து பெய்த கனமழையால் சாலையில் நடுவே வெடிப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் அப்பகுதியில் உள்ள அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து தேவனூர் நாடு ஊராட்சியில் உள்ள அரிப்பாலம் கிராமத்தில் இருந்து விளாரம் செல்லும் சாலையின் குறுக்கே திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு நீண்ட தூரத்திற்கு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் சாலையை உடனடியாக சரி செய்யும்படி நெடுஞ்சாலை துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பேருந்துகள் செல்லமுடியாமல் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.