ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “நாள்தோறும் பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சம்பவங்களால் வன்முறையை கைவிடும் எண்ணத்திற்கு நம் மண ஓட்டம் வந்துள்ளது. ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து என மன அமைதி கெட்டுவிட்டது. என் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. பேசுவதைவிட செய்ய வேண்டியது அதிகம்” என்றார்.
முன்னதாக, பெண் கால்நடை மருத்துவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நவம்பர் 28ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடையதாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நால்வரும் திட்டமிட்டு பெண் மருத்துவரின் இரு சக்கர வாகனத்தை பஞ்சர் செய்து, பின்னர் உதவி செய்வதுபோல் நடித்து அவரை பாலியல் வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரியவந்தது. நால்வரும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.