தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வாரம் இரண்டு முறை தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக பொதுசுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த 19ஆம் தேதி ஆணை வெளியிடப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள் மற்றும் தெருக்களில் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் உறுதி செய்வது அவசியம். இதனைப் போலவே திரையரங்குகள், இதர பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பூசி கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வெளிநாடுகளில் பரவி வரும் நிலையில்,அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்