தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல அணைகள் நிரம்பி உள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் பரமக்குடி, மஞ்சள்பட்டினம் மற்றும் தர்மராஜபுரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் தரைப்பாலம் உடைந்துள்ளது. அதனைப் போலவே பரமக்குடி- எமனேஸ்வரம் பகுதிகளை இணைக்கும் தரை பாலத்தின் மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் செல்லும் நிலையில் கால்நடைகள் அதிக அளவு தண்ணீரில் ஆற்றை கடந்து செல்கின்றது. அதே நேரத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வைகை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதால் அந்த பகுதி மக்கள் அதனை கண்டு ரசித்து வருகின்றனர்.